ஆட்சியை பிடிக்க இனவாதம் தூண்டப்படுகின்றது –கிழக்கு முதலமைச்சர்

இந்த நாட்டில் இனவாதத்தினை தூண்டி ஆட்சி அதிகாரங்களை பிடிக்க நினைப்பவர்களே தற்போதை அரசியல் குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

13வது திருத்த சட்டத்தில் அதிகார பகிர்வு என்னும் விடயத்தினை வழங்கிவிட்டு அதனை அமுல்படுத்துவதில் பல சிக்கல் நிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவார்கள்.அந்த அதிகாரபகிர்வுக்கு சமாந்தரமாக நிதியொதுக்கீடுகள் வழங்கப்படாத நிலையும் உள்ளது.

ஆயிரம் மில்லியன்களை தாண்டியதாக இதுவரையில் கிழக்கு மாகாணசபைக்கு நிதியொதுக்கீடுகள் வந்ததில்லை.ஆனால் இந்த ஆண்டு 4500மில்லியன் ரூபா நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டது மட்டுமன்றி கிழக்கு மாகாண அமைச்சுகள் ஊடாக பாதைகளை புனரமைப்பு செய்வதற்கு 900 கோடிரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர்கள் இணைந்து போராடியதன் பயணாக கிழக்கு மாகாணசபையின் கல்வி வளர்ச்சிக்காக 5471 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கான நிதியொதுக்கீகளில் மாற்றம்வேண்டும் என்பதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவாக அறிவிறுத்தி ஒட்டுமொத்த நிதியொதுக்கீகளையும் பெற்றுக்கொள்ளும் அனைத்து வழிவகைகளையும் மேற்கொண்டுவருகின்றோம்.

பிரதமர் கிழக்கு மாகாணசபைக்கு விஜயம் செய்தார்.எந்தவொரு மாகாணசபைக்கும் இதுவரையில் சென்றிராத பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதன்முறையாக கிழக்கு மாகாணசபைக்கு வருகைதந்து அனைத்து மாகாணசபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார்;.தனித்தனியாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முழு பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

பொதுமக்களின் காணிகளில் படையினர் பொலிஸார் உள்ளது தொடர்பில் வலிறுத்தப்பட்டது.அது தொடர்பான முழு விபரங்களையும் தனக்கு அனுப்பிவைக்குமாறு பிரதமர் எனக்கு பணிப்புரை வழங்கினார்.அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக நிலையில் உள்ள மதுபானசாலைகளை குறைப்பது தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.அது தொடர்பான முழுமையான விபரங்களை பிரதர் கோரியுள்ளார்.

இவ்வாறு ஒட்டுமொத்தமாக மாகாணத்தின் முழு செயற்பாடுகளையும் அடையாளம் கண்டு அவற்றினைசெயற்படுத்ததேவையான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றோம்.

கிழக்கு மாகாணசபையில் இடம்பெறும் நிதியொதுக்கீடுகளில் எந்தவித பிரச்சினையும் எழுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.அதனை சரியாக பங்கிடப்படவேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது.அதனை செயற்படுத்தவேண்டிய பொறுப்பும் முதலமைச்சர் என்றவகையில் எனக்கும் உள்ளது.

இந்த நாட்டில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது இந்த நாட்டில் இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தினை பிடிக்க முனையும் ஒரு கும்பலின் செயற்பாடுகளில் ஓரு வடிவமாகவே நோக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை ஜனாதிபதியும் பிரதமரும் இனவாத சக்திகளுக்கு அடிபணியாமல் இழுத்தடிப்புக்கள் செய்யாமல் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையின் தேவையினை உணர்ந்து செயற்படவேண்டும்.அதற்காகவே சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்தார்கள்.இந்த நாட்டில் இருந்த இனவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காவும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கவேண்டும் என்பதற்காகவே சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர்.அந்த இரண்டு விடயத்தினையும் செயற்படுத்தவேண்டியது உங்கள் பொறுப்பாகும் என்றார்.