மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்பைவிட தற்போது இரத்தப்பற்றாக்குறை அதிகரிப்பு –டாக்டர் விவேக்

மட்டக்களப்பு வைத்தியாலையில் இரத்த தட்டுப்பாட்டினை இயலுமானவரையில் குறைத்துக்கொண்டுசென்றாலும் இரத்தத்தின் தேவை முன்பைவிட அதிகளவில் அதிகரித்துச்செல்லும் நிலையிலேயே உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கே.விவேக் தெரிவித்தார்.
இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைப்பெற்றுக்கொண்ட பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.டி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அதிதியாக கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் விவேக்,

மட்டக்களப்பு வைத்தியாலையில் இரத்த தட்டுப்பாட்டினை இயலுமானவரையில் குறைத்துக்கொண்டுசென்றாலும் இரத்தத்தின் தேவை முன்பைவிட அதிகளவில் அதிகரித்துச்செல்லும் நிலையிலேயே உள்ளது.எதிர்பாக்கும் தேவையினை விட மிகவும் அதிகளவில் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

புற்றுநோய் தனி பிரிவு திறக்கப்பட்டுள்ளதுடன் விசேட வைத்திய நிபுணர்கள் பலர் வருகைதந்துள்ள நிலையில் இரத்த பாவனை அதிகமாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்தவங்கி பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளது.

இன்று இரத்ததானம் செய்யும் நிலையில் இந்த இரத்தம் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் இன்று வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர்.நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் மேலான பணியை இங்கு நீங்கள் ஆற்றுகின்றீர்கள்.

தலசீமியாவினால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் மூன்று தினங்களாக வைத்தியசாலைக்கு வந்துசெல்கின்றார்.அவருக்கு இரத்தம் வழங்க இரத்தம் இல்லாத நிலையிலேயே அவர் வந்துசெல்கின்றார்.அவர் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தினை நடாத்துபவர்.அவருக்கு தலசீமியா நோய் உள்ளதை அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே இருந்துவருகின்றார்.அவர் அந்த நோய் இருப்பதை கூறினால் அவரின் தொழில் இல்லாமல்போகும் என்பதுடன் அவரின் குடும்பமும் பாதிக்கப்படும் நிலையிருந்துவருகின்றது.அந்த இளைஞன் உயிர்வாழ்வதற்கே நீங்கள் இரத்தம் வழங்கி உதவிசெய்கின்றீர்கள்.

இவ்வாறு பலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.நீங்கள் என்ன தானம் செய்தாலும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி செய்யும் இரத்ததானமே சிறந்த தானமாகவும் உயர்ந்த தானமாகவும் நான் கருதுகின்றேன்.