வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்திசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் வீதியில் இறங்கி இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், பழைய மாணவர்கள் சங்கமும், பெற்றோர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள் கலந்து கொள்ள சென்ற போது பாடசாலை அதிபர் மறுப்பு தெரிவித்திருந்தும் மாணவர்கள் அதனை பொறுட்படுத்தாது தங்களுக்கு ஆசிரியர் வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது நல்லாட்சியிலும் ஆசிரியர் பற்றாக்குறையா?, தாய் பாடசாலைக்கே இந்த நிலையா?, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், கல்விச் சமத்துவம் எங்கே?, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படுமா?, கல்வி அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது ஏன்?, உயர்தரப் பிரிவை மூடுவதற்கு சதியா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கையில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், உயர்தர கலை, வர்த்தகப் பாடங்கள் மற்றும் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தங்களுக்கு இந்த பாட ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் தங்களுடைய கல்வி நிலை பாதிப்படைந்து செல்வதால் எங்களால் ஒரு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு மிகவும் கஷ்ட நிலையே இங்கு காணப்படுகின்றது.

இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் வாழைச்சேனை பிரதேச மாணவர்களின் கல்வி நிலை குறைந்து மாணவர்கள் இடைவிலகலுக்கு ஆளாகக் கூடிய நிலை ஏற்படலாம் என மாணவர்கள் இதன்போது தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் கடமை ஏற்றதையடுத்து அரசியல் வாதிகளின் பின்னால் சென்று அவர்களின் வார்த்தைகளை கேட்டு நடந்தமையால் கல்குடா கல்வி வலயம் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்பட்டு காணப்படுகின்றது என பெற்றோர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் பாடசாலையின் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியும் இணைந்தே இந்த பாடசாலையில் மிகவும் திறம்பட கல்வி கற்பித்த ஆசிரியர்கள், தங்களது சுயநலனுக்கு ஏற்ப அவர்களை தாங்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை பாடசாலை அபிவிருத்தியிலும், கல்வியிலும் பின்னடைந்து செல்கின்றது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்ட இடமாற்றமானது, இடமாற்றும் முன்னர் உரிய பாடசாலைக்கு நியமிப்பதற்கு ஆசிரியர்களையும் நியமித்து விட்டு இவ்வாறான இடமாற்றங்களை செய்யவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான இடமாற்றங்கள் நடைபெற்று, ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு பல வழிகளிலும் தெரியப்படுத்தி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

கல்குடா கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால் மாத்திரமே அவ்விடத்திற்கு வருகைத் தந்து அந்த பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை வழங்குவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிமொழி வழங்குகின்றார். ஆனால் உறுதிமொழி வழங்கியதற்கேற்ப ஆசிரியர்கள் சில இடங்களில் வழங்கப்படவில்லை. இன்னும் சில பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளது. அப்பாடசாலையும் ஆர்ப்பாட்டம் செய்தால் தான் ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படுமா என தெரியவருகின்றது.

இதன்போது வருகைத் தந்த கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடுமையான வாக்குவாதத்தின் மத்தியில் கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் இப்பாடசாலைக்கு ஆசிரியர்களை வழங்குவதாக தெரிவித்தார். அவ்வாறு வழங்கவில்லையாயின் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறி கலைந்து சென்றனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், கோ.கருணகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் சகிதம் கலந்து கொண்டு இடையூறு விளைவித்திருந்தனர்.

அண்மையில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் மக்களின் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றிருந்த வேளையிலும் வலயக் கல்விப் பணிப்பாளருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடுமையான வாக்குவாதத்தின் மத்தியில் ஆசிரியர் நியமனங்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் 12 ஆசிரியர் நியமங்களை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.