திறந்துவைக்கப்படவிருந்த பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து நாசம் -ஏறாவூர் குடியிருப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள தற்காலிக பாடசாலைக்கட்டிடம் ஒன்று நேற்று சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் நாளை திங்கட்கிழமை தரம் ஒன்று மற்றும் இரண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் குறித்த கட்டிடம் தீபிடித்து எரிந்துள்ளதுடன் தீயினை பிரதே மக்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அணைக்கப்பட்டுள்ளது.

எனினும் தீயினால் குறித்த கட்டிடத்தினுள் இருந்த தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த தீ சம்பவம் மின் ஒழுக்கினால் ஏற்பட்டதா நாசகார செயலா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.