கிழக்கு மாகாணத்திற்கு தனி நிதியம் உருவாக்கப்படவேண்டும் -ஜனா

கிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என அம்மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.கிழக்கு மாகாண சுகாதாரப் பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும். எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் அந்த நிதியத்தின் ஊடாக உதவத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பணம் மத்திய அரசாங்கத்தின் ஊடாக வருவதை விரும்பவில்லை' என்றார்.

 'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டுக்கொண்டிருந்தாலும், இருக்கின்ற மாகாணத்துக்கு சகல அதிகாரங்களும் பெறப்பட்டு சுயாட்சி அதிகாரம் மாகாணத்தில் இருக்க வேண்டும் என்று ஒன்பது மாகாண சபைகளில் இருக்கும் முதலமைச்சர்களினுள்; முதலாவது முதலமைச்சராக எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 90 சதவீதமான நிதி முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பத்து சதவீதமான நிதியே தமிழ், சிங்கள பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஊடகங்களில் வெளிவந்ததை பார்த்தேன். அந்த நிலை இருக்க கூடாது. அந்த நிலை மாறவேண்டும்.

மூன்று இன மக்களும் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தில் எங்களுக்குள் பாகுபாடுகள் இருக்க கூடாது. அந்த வகையில் நான் முதலமைச்சரை பாராட்டுகின்றேன். அவரது கிராமிய எழுச்சி திட்டத்திற்கூடாக 105 மில்லியன் அவரது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு செய்யப்பட்டது. அதாவது 12 கிராமங்கள் அதனூடாக அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திற்கும் 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐந்து முஸ்லிம் கிராமங்களையும் ஐந்து தமிழ் கிராமங்களையும் இரண்டு சிங்கள கிராமங்களையும் தெரிவு செய்திருக்கின்றார். அந்த நிலைமை இருக்க வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்' என்றார்.