மட்டக்களப்பில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

முறையற்ற இடமாற்றங்களை கண்டித்தும் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியும் ஆசிரியர்கள் சிலர் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஆசிரிர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கஸ்ட பிரதேச கற்பித்தல் செயற்பாடுகளை பூர்த்திசெய்தபோதிலும் மீண்டும் கஸ்ட பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 15வருடங்கள் வேறு வலயம் செய்தபின்னர் மீண்டும் புதுவலயமா?,பாரபட்டமான இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கவனஈர்ப்பு போராட்டம்,வருடாந்த இடமாற்றத்திற்கான இடமாற்றம் கோரப்பட்டதா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

எந்தவித அடிப்படையும் இன்றி இடமாற்றம் காலங்கள் பார்க்கப்படாமல் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போர்க்காலத்தில் கஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு மீண்டும் வெளி வலயத்தில் கடமையாற்றும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது பாரபட்சமான செயற்பாடுகள் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடமாற்றங்கள் காரணமாக ஆசிரியர்கள் மனதளவில் பெரும்பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக கற்பித்தல் செயற்பாடுகளை உரியமுறையில் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து ஆசிரிய இடமாற்ற கொள்கைகளுக்கு முரணாக 38 ஆசிரியர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆசிரிய இடமாற்றம் காரணமாக சாதாரணதரம்,உயர்தரம்,ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.