சுற்றாடலில் காணப்படும் கழிவுகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை –மண்முனை வடக்கு சுற்றாடல் திணைக்கள பொறுப்பதிகாரி

எமது சுற்றாடலில் காணப்படும் கழிவுகள் வெறும் கழிவுகள் அல்லாமல் அவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றாடல்திணைக்கள பொறுப்பதிகாரி திருமதி ரஜனி பாஸ்கரன் தெரிவித்தார்.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலயம் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

புனித ஜோசப்வாஸ் வித்தியாலயத்தின் சுகாதார கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் மா.இ.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றாடல்திணைக்கள பொறுப்பதிகாரி திருமதி ரஜனி பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆலோசகர் ஜி.கிருஸ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு சுற்றாடலை பாதுகாக்கும் வழிமுறை தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சுற்றாடலை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சுற்றாடலை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பான பதாகைகளை மாணவர்கள் இந்த பேரணியின்போது ஏந்தியிருந்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றாடல்திணைக்கள பொறுப்பதிகாரி,

மாணவர்கள் தங்களது பிறந்த தினத்தின்போது இனிப்பு பண்டங்களை வழங்கும்போது இனிப்பு பண்டம் சுற்றப்பட்டிருக்கும் பொலித்தின்களால் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.அதனை தவிர்க்கும் வகையில் பிறந்த தினத்தின்போது மரம் ஒன்றை நடும்போது அது சூழலுக்கு பெரும் நன்மையினை ஏற்படுத்துகின்றது.

இன்று சூழலை பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது.அதனை செய்வதற்காக இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.