மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் செயற்பாட்டினை கண்டித்தும் சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றிணைக்கண்டித்தும் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் நாளை சனிக்கிழமை காலை 8.00மணி வரை ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பாக இது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் மட்டுமே கடமைக்கு சென்றுள்ளதாகவும் ஏனைய அனைத்து பிரிவு வைத்தியர்களும் பணி பகிஸ்கரிப்பில் இணைந்துகொண்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தெரிவித்தார்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் போன்றவற்றிற்காக வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் மருந்துகள் பெறமுடியாமல் திரும்பிச்செல்வதையும் காணமுடிகின்றது.

வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிப்பாளரின் அலுவலகத்தில் தினமும் தமது செயற்பாடுகள் தொடர்பில் பதிவுசெய்து கையொப்பம் இடவேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபம் ஒன்று அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வைத்தியசாலைகளில் அது சாத்தியமற்றது என வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களினால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மட்டும் தங்களை பதிவுகளை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தல்களை வழங்குவதாக வைத்தியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் சந்திப்பும் இதன்போது நடைபெற்றது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்பில் கலந்துரையாடச்சென்றபோது தங்களை அவமானப்படுத்தும் வகையில் வைத்திய பணிப்பாளர் நடந்துகொண்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தெரிவித்தார்.

வைத்தியர்கள் சங்கத்தின் நடவடிக்கைகளை கடந்த காலத்தில் இருந்த பணிப்பாளர்கள் விமர்சிக்கவில்லை.ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சங்கத்தினை விமர்சித்துள்ளதுடன் வைத்தியர்களையும் தரக்குறைவான முறையில் பேசியுள்ளார்.இதுமிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

பணிப்பாளரின் செயற்பாடுகள் தொடர்பில் எமது தலைமை சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கையெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் இன்று காலை தமது பணி பகிஸ்கரிப்பு தொடர்பான அறிவித்தல் பலகையொன்றினை வெளிநோயாளர் பிரிவு பகுதியில் காட்சிக்காக வைத்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த வைத்திய பணிப்பாளர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உபதலைவரை நோயாளிகள் மற்றும் தாதியர்கள் முன்பாக வைத்து தரக்குறைவான முறையில் நடாத்தியுள்ளதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒரு அலுவலகத்தில் உயர் தரத்தில் உள்ளோர் தமக்கு கீழ் நிலையில் உள்ளவர்களுடன் சிறந்த உறவினைப்பேணவேண்டும் என்று அரசாங்கம் கூறிவரும் நிலையில் இவ்வாறானவர்கள் இவ்வாறு செயற்பட்டுவருவதாகவும் வைத்தியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சமூகத்தில் உயர் தரத்தில் மதிக்கப்படும் வைத்தியர்களை பொதுமக்களுக்கு முன்பாக வைத்து ஒரு வைத்திய பணிப்பாளர் தரக்குறைவாக நடாத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரியவர்களுக்கு அழுத்தங்களை வழங்கவுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் கருத்தினைப்பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் இப்றாலேப்பையை தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் தொடர்புகொள்ளமுடியவில்லை.