மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கு மூன்று ஆண்டு திட்டத்தை தயாரிக்குமாறு பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கல்வி வலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஆண்டு செயற்றிட்டத்தினை தயாரிக்குமாறு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தின் 2016ஆம் ஆண்டிக்கான பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் மற்றும் பிரதேச செயலாளர் எம்.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,கிராம சேவையாளர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது பிரதேசத்தின் கல்வி நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

யுத்த சூழ்நிலையினால் மிகவும் கடுமையான பாதிப்புகளைக்கொண்ட பகுதி என்ற அடிப்படையிலும் வறுமை நிலையில் உள்ள அதிகளவில் உள்ள மக்கள் என்ற அடிப்படையிலும் கல்வியின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக இப்பகுதியில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் 60க்கும் மேற்ப்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவற்றினை தீர்த்துவைக்கப்படும்போதே கல்வி முன்னேற்றம் தொடர்பில் சிந்திக்கமுடியும் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.

இதன்போது உயர்தரப்பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் தோற்றி மூன்று பாடங்களில் திறமைச்சித்திகளைப்பெற்றவர்களை ஆசிரிய உதவியாளர்களான இணைத்துக்கொள்வதன் மூலம் இந்த பற்றாக்குறையை நிவர்த்திசெய்யமுடியும் என பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஆண்டு செயற்றிட்டத்தினை தயாரிக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பணிப்புரை வழங்கினார்.