2016ம் ஆண்டுக்கான முதலாவது உயர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

(லியோ)

மண்முனை வடக்கு  பிரதேசத்தின்   2016 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான முதலாவது குழு கூட்டம்  மண்முனை வடக்கு  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு  பிரதேச செயலகப்பிரிவில் 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக  2016ம் ஆண்டுக்கான முதலாவது உயர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்   பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்  வி .தவராஜா   ஒழுங்கமைப்பில்   இடம்பெற்றது. 

கடந்த வருடத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும்  மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2916 ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட   வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு , மின்சாரம், மீன்பிடி , விவசாயம் ,கால்நடை ,போக்குவரத்து , சமுர்த்தி கடன் வசதி போன்ற பல்வேறு பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பாக  ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய  பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கையில்  கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்கள் கூட்ட சந்தர்ப்பம் கிடைக்கப்படவில்லை .

அதுமாத்திரம் இன்றி நீதி ஒதுக்கீடுகளிலும் சரியான நடைமுறை இல்லாத காரணத்தினால் இவ்வாறான கூட்டங்கள் கூட்டப்பட சந்தர்ப்பம் கிடைக்கப்படவில்லை .

இந்த ஆண்டிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி  ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் அதிகமான வேலைத்திட்டங்களையும் , அபிவிருத்திகளையும் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்ற சூழ் நிலையில் தான் நமது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீடுகளை கொண்டு இந்த வருடத்திலே செய்யப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஆராயப்பட விருப்பதாக தெரிவித்தார் .

கடந்த காலங்களில் இந்த பிரதேச செயலகத்தினுடைய முன்னேற்றத்துக்காக ஒத்துழைத்த முன்னாள் இணைத் தலைவர்கள் , பிரதேச செயலாளர்கள் , நிர்வாக உத்தியோகத்தர்கள் , திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைமைத்துவங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் .

எதிர் காலத்தில் இந்த பிரதேச செயலகம் எங்களுடைய இணைத் தலைமைத்துவங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ்  இந்த பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் .

குறிப்பாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு என்பது இந்த மாவட்டத்தினுடைய தலை நகரம் இந்த மாவட்டத்தினுடைய தலைமை காரியாலயம் உட்பட அனைத்து பிரதான  அலுவலங்கள் இருக்கின்ற ஒரு முக்கியமான நகரத்தினுடைய ஒரு பிரதேச செயலகம் ஆகவே இந்த பிரதேச செயலகத்தினுடைய அபிவிருத்தி குழு கூட்டம் என்பது இந்த மாவட்டத்தினுடைய  முக்கியமான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அலுவலகம்.

அந்த அடிப்படியிலே இந்த பிரதேச செயலகம் மிக சிறப்பாக இந்த அபிவிருத்தி குழு கூட்டம் இயங்க வேண்டியது ஏனைய பிரதேச செயலக கூட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொறுப்பு   இருக்கின்றது .

அந்த வகையில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும்  இராஜாங்க அமைச்சருமாகிய நானும்  இணைத்த தலைவர்களாகிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  ஞா. சிறிநேசன்   ஒன்றிணைந்து மிக சிறப்பான பணியை எதிர் காலத்தில் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்ற நிலையில் உங்கள் அனைவருடைய பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என இந்த கூட்டத்தின் போது கேட்டுக்கொண்டார் .



இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  ஞா. சிறிநேசன் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . யோகேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்  அலிசாகிர் மௌலானா ,  , மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , கிழக்கு மாகாண சபை தவிசாளரும் , கிழக்கு மாகாண உறுப்பினருமான . என் .இந்திரகுமார் பிரசன்னா  ,   கிழக்கு  மாகாணசபை உறுப்பினர்கள்  இரா . துறைரெத்தினம் , கோவிந்தன் கருணாகரன் , எ. டி . முகமட்  ஷிப்லிபாருக், ஞா . கிருஷ்ணபிள்ளை , எம் . நடராஜா , உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , திட்டமிடல் பணிப்பாளர் . எஸ் . சதிஸ்குமார்  மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பிரதேச அபிவிருத்தி  திணைக்கள அதிகாரிகள்,  பிரதேச செயலக அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர் , பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.