மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினை அவுஸ்ரேலிய தூதுவர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்திசெய்து அதன் ஊடாக மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்த்துவைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவிகளை வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருட்தந்தை டி.சுவாமிநாதன் அடிகளார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை இலங்கைக்காகன அவுஸ்ரேலிய தூதுவர் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிரையீ ஹட்சன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் டோமின் ஜோஜ்,பொருளாளர் ரஞ்சிதமூர்த்தி மற்றும் அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அவர் புதிய ஆட்சியின் கீழ் இடம்பெறும் செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் யுத்த சூழ்நிலையில் அதிகளவு விதவைகள் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள நிலையில் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப தேவையான உதவிகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான முழு உதவிகனையும் அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கும் எனவும் இங்கு உறுதியளிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்பதற்கும் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கும் உதவுமாறு அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவைப்பாடுகளை தி;ட்டங்களாக பதிவுசெய்து வழங்குமாறும் தாம் மீண்டு ஒருமுறை மாவட்டத்திற்கு வருகைதந்து தேவையான உதவிகள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதாக தூதுவர் உறுதியளித்ததாக சிவில் சமூகத்தின் தலைவர் தெரிவித்தார்.