தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சமூக அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ( VIDEO & PHOTOS )

(லியோன்)

நாடளாவிய ரீதியில் கடந்த  வருடம்     668 துருனு சிரம சக்தி  இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன .

 நாட்டில் இன ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை  வெற்றிகரமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் இவ்வாறு  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொண்டுவரும் இளைஞர் அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு  மட்டக்களப்பு  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்தில் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  உதவி பணிப்பாளர் எம். எல் .என் .எம் .  நைறூஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது  .   

இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தினால்   2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் 23 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 18 வேலைத்திட்டங்கள்  மற்றும்  2016 ஆம் ஆண்டு  மே மாதம் 24  ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் வரை நடைமுறைப் படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும்  இங்கு பணிப்பாளரினால் தெளிவூட்டப்பட்டன.

துருனு சிரம சக்தி தேசிய  இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டன.

ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் இரண்டு வேலைத்திட்டங்கள் என்ற அடிப்படையில் 28 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில்  ஒரு  திட்டம்  இலட்சம் ரூபாய் பெறுமதியாகும். இந்த திட்டத்தின்  கீழ் வீதி  அபிவிருத்தி , மக்கள்  ஒன்றுகூடல் மண்டபங்கள், வாசிகசாலைகள் , பாலர் பாடசாலைகள்  போன்ற  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

துருனு சிரம சக்தி  தேசிய இளைஞர்  அபிவிருத்தி வேலைத்திட்டத்தில்  இந்த வருடத்தில் 1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 348  கிராம அலுவலகர் பிரிவுகளிலும் எமக்கு வழங்கப்பட்ட இலக்கைத் தாண்டி 369  இளைஞர் கழகங்களை உருவாக்கி   அதில் சுமார் 16 ஆயிரம் இளைஞர்,  யுவதிகளை அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டுள்ளோம் .

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தினால்   நாட்டில் நிலவிய  சீரற்ற காலநிலையால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மேற்கொண்ட நிவாரண சேகரிப்பின் மூலம் 150,000 ரூபாய் பணமும் 150,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும்  சேகரிக்கப்பட்டுள்ளன .

சேகரிக்கப்பட்ட பணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் மற்றும் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தலைமை அலுவலகத்தின் ஊடாக   வழங்கப்படவுள்ளது .

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்   நாட்டில் இன ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான பல  வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக  நடைமுறைப்படுத்தப்பட்டு  வருவதாக மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல் என். எம் . நைறூஸ் தெரிவித்தார்.


இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது