மட்டக்களப்பு மாவட்டத்தில் 24மணி நேரத்தில் 85.4மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 85.4மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி வரையிலான காலப்பகுதியிலான 24மணி நேர காலப்பகுதியிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று தொடக்கம் கடும் காற்றுடன் மழைபெய்துவருவதன் காரணமாக தாழ்நிலங்கள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி,பட்டிப்பளை,காத்தான்குடி,மட்டக்களப்பு,ஏறாவூர்,செங்கலடி,வாழைச்சேனை,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களே தொடர்ந்து மழைபெய்தால் மூழ்கும் நிலையேற்படும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்துவரும் மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதை காணமுடிகின்றது.சில இடங்களில் கடும் காற்று காரணமாக மரங்களும் முறிந்தவீழ்ந்துள்ளதை காணமுடிகின்றது.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் 145.8மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 90.2மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாக வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.