கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட விடுதி திறப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் புனரமைக்கப்பட்ட மாணவர்கள் விடுதி இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுஇந்த விடுதியை திறந்துவைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கனடா மக்களிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தெற்காசிய கனடா வாழ் மக்களின் மனிதாபிமான அமைப்பின் நிதியுதவியுடன் மனித நேய கரங்கள் அமைப்பினால் இந்த விடுதி புனரமைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் மிகவும் மோசமான நிலையில் மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவற்ற நிலையில் இருந்த குறித்த விடுதியின் நிலமை தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாசினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்க கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து குறித்த விடுதி புனரமைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விடுதி திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம்,உடற்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட விடுதிக்கான தளபாடங்களும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக காணப்பட்ட விடுதியின் குறைபாட்டினை நீக்கியமையை பாராட்டும் வகையில் பாடசாலை சமூகத்தினால் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.