காட்டு யானை தாக்குதலை தடுப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துங்கள் - இரா.துரைரெட்னம் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்களை தடுப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக யானைகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இன்று அதிகாலை கூட வவுணதீவு,பட்டிப்பளை பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.பொருளாதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.சிலர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் யானை தாக்குதல் உள்ள பிரதேசங்களில் இருந்து யானைகளை அப்புறப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டபோதிலும் அவை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த காலத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையே இருந்துவந்தது.தற்போதைய ஆட்சிகாகலத்திலும் எடுக்கப்படும் தீர்மானங்களும் நடைமுறைப்படுத்ப்படாத நிலையே இருந்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசம் தொடர்ந்து யானை தாக்குதல்களின் அச்சுறுத்தலில் இருந்துவருகின்றது.யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே இந்த நிலைமை இருந்துவருகி;ன்றது.

இது தொடர்பில் நிலையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அதற்கான முன்மொழிவுகளை எடுத்தபோதிலும் இதுவரையில் அவறை நிறைவேற்றப்படவில்லை.

இன்று காலை வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர்களுடன் தொடர்புகொண்டு நிலைமையினை விளக்கியுள்ளேன்.உடனடியாக வனஜீவராஜிகள் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு மக்களை அச்சுறுத்தும் யானைகளை அப்பகுதிகளில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு கோரியுள்ளேன்.

அத்துடன் யானை தாக்குதல் உள்ள பகுதி மக்களுக்கு போதுமான யானை வெடிகளை வழங்குமாறும் கோரியுள்ளேன்.நான் நேற்று காலை பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றபோதிலும் இதுவரையில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவில்லை.இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளேன் என்றார்.