சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச நாடக தின நிகழ்வு ஆரம்பம்

சர்வதேச நாடக தின விழா மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கோலாகலமாக ஆரம்பமானது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி ஜெய்சங்கர் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்லையா இராசதுரை கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பாரம்பரிய கலாசார இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு, சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சர்வதேச நாடக தின ஆரம்ப நிகழ்வாக நடன விரிவுரையாளர் கலாநிதி து.உஷாந்திணியின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட பண்பாட்டு வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது.நிகழ்வின் திறப்புரையினை மனித உரிமைகள் செயற்பாட்டாளாரும் சட்டத்தரணியுமான கலாநிதி கிரன் கிருவல் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தா கல்லூரியை உருவாக்கிய முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்லையா இராசதுரை, வட மோடி , தென்மோடி கூத்து கலைஞர் வெ.பரமகுட்டி மற்றும்  விலாசகூத்துக்கலைஞபுர் கலைஞர் ஐ.அரசரெத்தினம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இன்று காலை ஆரம்பித்துள்ள சர்வதேச நாடக தின விழா நாளை இரவு வரை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.