தகவலறியும் சட்டத்தினை மக்கள் சரியானமுறையில் பயன்படுத்தவேண்டும் - சமூக அமைப்புக்களின் வலையமைப்பு தலைவர் எஸ். செந்தூரராஜா

தகவல் அறியும் சட்டத்தை மக்கள் சரியான முறையில் பிரயோகிக்கத் துவங்கினால் அது மக்களுக்கு மிகப் பெரிய பயனைக் கொடுப்பதோடு அதன் மூலம் இப்போதுள்ளதிலும் பார்க்க உண்மையான ஜனநாயக நல்லாட்சி மலர வழிவகுக்கும் என அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு  தலைவர் எஸ். செந்தூரராஜா தெரிவித்தார்.
“இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை பலப்படுத்தல்” எனும் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஞாயிறு 27.03.2016 காலை மட்டக்களப்பு சின்ன உப்போடை, பறங்கியர் மன்ற  கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு தலைவர் எஸ். செந்தூரராஜா, தலைமையில் ஆரம்பமானது.

இதில் பிரதேச மற்றும் தலைநகர ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகத்துடன் தொடர்புடைய உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய செந்தூரராஜா மேலும் கூறியதாவது,

மனித உரிமைகள் விடயத்திலே ஊடகங்களின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு மிக காத்தரமான பங்கை வகிக்கக் கூடியது.
அந்த வகையில் ஊடகங்கள்தான் தகவல் அறியும் சட்டம் என்றால் என்ன என்ற தெளிவை மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் பாமரர்கள் உட்பட ஒரு சில படித்தவர்களும் கருத்துச் சுதந்திரம் என்கின்ற அந்தப் பதத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக தெளிவற்று இருக்கின்றார்கள்.

தகவல் அறியும் உரிமை என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான உரிமையையும் வாய்ப்பையும் அளிக்கும்.

நாங்கள் கிராம மட்டங்களில் நலிவுற்ற இல்லாத இயலாத, யுத்தத்தால் பாதிக்கப்பட்டுப் போயுள்ள  மேலும் பொருளாதார, கல்வி ரீதியாக பின்னடைந்த மக்கள் தங்களிமுள்ள பிரச்சினைகளையும் வேணவாக்களையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு வெகுஜன ஊடகங்களை வெகுவாக நம்பியிருக்கின்றோம்.

அதனூடாக கொள்கை வகுப்பாளர்களிடையே சிந்தனை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு சாதகமான விளைகளைக் காண்பதும் இந்தத் திட்டத்தின் நீண்ட கால நோக்கமாகவுள்ளது.

பொது மக்களுக்குப் போதிக்கும் விடயங்களில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அந்தப் போதனைக்கேற்ற மாதிரி ஒரு முன்மாதிரியாக இருந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த கலந்துரையாடலின் மற்றொரு குறிக்கோளாகும்.

புதிய சிந்தனைகளை நடைமுறையில் பிற்பற்ற வேண்டும் என்பது இதன் தொனிப்பொருள்.அத்துடன் பொலித்தீன், பிளாஸ்டிக், இரசாயனப் பாவினை, காடழிப்பு, பல்லினத் தன்மையைப் பாதிக்கும் விடயங்கள், இயற்கையை மாசுபடுத்தல் என்பனவற்றில் நாம் அதீத அக்கறை செலுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை பலப்படுத்தல், அடிப்படை உரிமைகள், ஊடக உரிமைகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலாக இந்த செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு தலைவர் எஸ். செந்தூரராஜா, இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் கோப்ரி அழகரட்ணம், அக்டெட்  நிறுவன மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ. சிவலோகிதன், சொன்ட் நிறுவன நிருவாக மற்றும் நிதிப் பிரிவு அதிகாரி என். பிரவீனா, வெளிக்கள அலுவலர் ரீ. சிவநடராஜா, இணைப்பாளர் என். கிறைஷன், திட்ட அதிகாரி ரீ. விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் என். பிரியரஜனி, மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டோரும் தலைநகர மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.