சர்வதேச மகளிர் தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு அமைப்பு அழைப்பு

சர்வதேச மகளிர் தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு “தமிழீழ நேசர்” என்னும் பெயர் கொண்ட அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வீடும் இல்லை வீதியும் இல்லை,நாதியும் இல்லை,நாதனும் இல்லை.எம் கண்ணீரையும் பசியையும் விலைபேசி வெற்றிபெற்றவர்கள் விழாக்களில் இன்று நாயகர்கள்.எமக்கு நாடும் இல்லை,வீடும் இல்லை.நல்லாட்சியும் இல்லை.

தலைவனும் இல்லை,தளபதியும் இல்லையென்ற கவலைவேண்டாம்,வேளை வரும்போது வேலைகள் தானே நடக்கும்.வேலியை மேயும் பயிரை மேயும் ஊழலை ஒழிக்கவேண்டும்.படலைக்குள் முடங்கியும் போராடமுடியும்.

தமிழினியை தவிக்கவைத்துவிட்டு இறக்கவிட்ட தலைவர்களுக்கு சூடுவைக்க,தனயனையும் கணவனையும் கையளித்து கலங்கி நிற்கும் பேதையரே முதிர்கன்னியராய் முடங்கி கிடக்கும் சகோதரிகளே உங்கள் கண்ணீரை விற்று தண்ணீரில் மிதப்பவர்கள் எத்தனைபேர்.

மார்ச் எட்டு இனி எமக்கு ஒரு துக்கதினம்,கரிநாள்.அடையுங்கள் கதவை,வீதி உறங்கினால் பீதிகொள்ளும் அரசு.வன்முறையும் வேண்டாம் ஆர்ப்பாட்டமும் வேண்டாம்.பூட்டுங்கள் கதவை காட்டுங்கள் உங்கள் சோகத்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.