மகிந்த திக்கற்ற நிலையில் சிறுபான்மை மக்களின் காலை பிடிக்க முனைகின்றார் –பிரசன்னா இந்திரகுமார்

மகிந்த ராஜபக்ஸ இன்று திக்கற்ற நிலையிலேயே சிறுபான்மை சமூகத்தின் காலை பிடிக்கமுனைவதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.கடந்த காலத்தில் பெரும் அழிவுகளை எதிர்கொண்ட சமூகமான தமிழ் சமூகம் இன்று எதனையும் பெறமுடியாத நிலையில் இருக்கின்றது.

நாங்கள் எமது உரிமையினை இன்றும்போராடிப்பெறவேண்டிய நிலையிலேயே இருந்துவருகின்றோம்.மைத்திரி ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும்பெற்றுக்கொள்வோம் என்ற மாயை மட்டுமே எமக்கு இருந்துவந்தது.ஆனால் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் எவையும் பூர்த்திசெய்யப்படவில்லை.

தமிழர்களை தொடர்ந்தும் போராடும் இனமாக வைத்துக்கொள்வதற்கே இந்த பெரும்பான்மையினர் முயற்சிசெய்துவருகின்றனர்.நாங்கள் இந்த நாட்டின் மக்கள் என்பதை எந்த அரசாங்கமும் ஏற்பதற்கு தாயாராக இல்லாத நிலையே இருந்துவருகின்றது.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கு பெரும் அட்டூழியங்கள் இடம்பெற்ற ஆட்சிக்காலமாக மகிந்த ஆட்சிக்காலம் இருந்துவந்தது.

பொதுபலசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.அதேபோன்று தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன் வெள்ளைவான் கலாசாரமும் மேலோங்கி காணப்பட்டது.

ஆனால் அதே மகிந்த இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படவில்லையென்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தன்னை மீறி நடந்தது என்று கூறியிருப்பது அவருக்கு எந்த திக்கும் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளதை காட்டுகின்றது.இந்த நிலையிலேயே சிறுபான்மைசமூகத்தின் காலை பிடிக்கும் முயற்சியினை மகிந்த மேற்கொண்டுவருகின்றார்.

நாங்கள் எமது அரசியல் பலத்தினை அதிகரிக்கவேண்டும்.நாங்கள் பிரிந்து நின்று எமது சமூகத்தினை மீண்டும் பாதாளத்துக்குள் கொண்டுசெல்லும் நிலைக்கு செல்லக்கூடாது.என்றார்.