புலம்பெயர்ந்து சென்றாலும் தாய்நாட்டின் நினைவுடனேயே வாழ்கின்றோம் -எழுத்தாளர் கல்லாறு சதீஸ்

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது தாய்நாட்டின் நினைவுகளை தாங்கியவாறே அனைவரும் வாழ்ந்துவருவதாக புலம்பெயர் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான கல்லாறு சதீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் அனுபவ பகிர்வுகளை சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள கல்லாறு சதீஸ் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு எழுத்தாளரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி தங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது எழுத்தாளர்களின் நிலைமைகள் மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் அனுபவங்கள் தொடர்பில் இங்கு கருத்துகள் பரிமாறப்பட்டன.

அத்துடன் சர்வதேச ரீதியில் தனக்கென தனி இடத்தினை எழுத்து துறையிலும் சமூக சேவையிலும் கொண்டுள்ள புலம்பெயர் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான கல்லாறு சதீஸ் கௌரவிக்கப்பட்டார்.