வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளவான நிதி முஸ்லிம் பிரதேசங்களுக்கு –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2016ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியில் அதிகளவான நிதி முஸ்லிம் பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணசபையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான இந்த ஆண்டு சுமார் 15கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 350 கிலோ மீற்றர் வீதிகள் உள்ளன.இவற்றில் 140 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் மிகுதியான வீதிகள் புனரமைக்கப்படவேண்டிய பகுதிகளாக உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களிலேயே அதிகளவான வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளது.கடந்த காலங்களில் ஏற்பட்ட செயற்கை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் சுமார் 06கோடி ரூபா நிதி முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.இவற்றில் ஏறாவூரில் அண்மையில் அமைக்கப்பட்ட ஜின்னா வீதிக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த வீதி 2013ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டரைக்கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதியாகும்.இவ்வாறான நிலையில் மீண்டும் அதற்கு பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் கவனத்தில்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதிப்பின் அடிப்படையில் திட்டமிடவேண்டும்.இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலையேற்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.