ஆலயங்கள் கல்விப்பணிக்கு செலவிடுவது குறைவு –மட்டு.மாநகர ஆணையாளர்

பெருமளவு நிதிகளைக்கொண்டுள்ள சில இந்து ஆலயங்கள் கல்விப்பணிக்கோ பொதுப்பணிக்கு எதுவித செலவுகளையும் மேற்கொள்வதில்லையென மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை பொதுமயானத்தினை அழகுபடுத்தல் மற்றும் சுற்றுமதில் அமைக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கல்லடி,உப்போடை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயங்களின் ஏற்பாட்டில் பொதுமக்களின் உதவியுடன் இந்த பொதுமயானத்தினை அழகுபடுத்தல் மற்றும் சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கல்லடி,உப்போடை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயங்களின் முகாமையாளர் எஸ்.ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது கல்லடி பகுதிகளில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடப்பட்டதுடன் அழகுபடுத்தும் வேலைகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சுற்றுமதில் அமைக்கும் பணிகளில் பங்குபற்ற விரும்பும் பொதுமக்கள் கல்லடி,உப்போடை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயங்களின் நிர்வாகசபையினரை தொடர்புகொண்டு தங்களது பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஆணையாளர்,
பொதுமயானங்கள் ஆலயங்களுக்கு மேலாக நோக்கப்படவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமயானங்களை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துவது மிகவும் குறைவானதாகவே உள்ளது.

சில ஆலயங்களில் பெருமளவான நிதிகள் உள்ளன.அவைகள் பொதுபயன்பாட்டுக்கோ கல்வி செயல்பாடுகளுக்கோ செலவிடுவதில்லை.அந்தவகையில் கல்லா,உப்போடை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயம் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளவந்தமை பாராட்டுக்குரியது என்றார்.