கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுபுகழ்மிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர நூதன பஞ்சகுண்ட பட்ஷ மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டு.வாவி மகள் தாலாட்டும் ஓசையில் பண்ணெடுங்காலமாக அமர்ந்திருந்து அருளாட்சி புரிந்துவரும் புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது.

ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிவார மூர்த்திகளான கணபதி,விஸ்வகர்மா,காயத்திரி,தட்சணாமூர்த்தி,மகாலக்சுமி,துர்க்கா பரமேஸ்வரி ஆதிவைரவர் ஆகிய ஆலயங்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

சபரிமலை ஐயப்ப குருசாமி கிரியா கிரமஜோதி சங்கீத சாகரன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன.

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி புண்ணியாகவாசனம், துவஜத்தம்பபூஜை, யாகபூஜை, மகாபூர்ணாகுதி, சமர்ப்பணம், தீபாராதணை உட்பட பல கிரியைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றதுடன் பிரதான கும்பத்துக்கு விசேட பூஜைகளும் நடைபெற்றன.

பூஜையை தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு நாத,வேத,ஆரோகரா கோசங்களுடன் இராஜகோபுரத்திற்கான மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.