தாயகத்தின் பிரபல இசை விற்பன்னருக்கு மட்டக்களப்பில் இறுதி அஞ்சலி

மாரடைப்பினால் காலமான இலங்கையில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் ஒருவரான மட்டக்களப்பினை சேர்ந்த வேல்முருகு சிறிதரனின் இறுதிக்கிரியைகள் நேற்று கள்ளியங்காடு இந்து மயானத்தில் நடைபெற்றது.
மிருதங்க வித்துவானாக பரிணமித்துவந்த சிறிதரன் சகல தோல் வாத்தியங்களையும் இசைப்பதில் இலங்கையில் சிறந்த இசைவிற்பன்னராக இருந்துவந்தார்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட அவர் கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வசித்துவந்தார்.

இசைப்பாரம்பரிய குடும்பத்தில் தோன்றிய சிறிதரன் கிழக்கிலங்கை மட்டுமன்றி முழு இலங்கையிலும் பெயர் சொல்லக்கூடிய கலைஞராக வலம்வந்தவர்.

சாஸ்திரிய கலைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கலைஞன் என்பதுடன் தோல் இசைக்கருவிகளை மீட்டுவதில் தனக்கென தனி இடத்தினை கொண்டுள்ளார்.விசேடமாக அனைத்து தோல் கருவிகளையும் அவர் மீட்டும் தகுதிவாந்தவராக காணப்பட்டபோதிலும் மிருதங்கத்தில் தனக்கென தனி இடத்தினைக்கொண்டவராக காணப்படுகின்றார்.

மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளராக கல்வி போதிக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள்,விரிவுரையாளர்கள்,பொதுமக்கள்,கலைஞர்கள் என பெருந்திரளானோர் சிறிதரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த தலைசிறந்த மிருதங்க விற்பன்னரின் இழப்பு தமிழ் இசையுலகுக்கு பேரிழப்பாகும் என இங்கு கருத்து தெரிவித்த கலைஞர்கள் தெரிவித்தனர்.