தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன

(லியோன்)


தேசிய ரீதியாக  டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு  டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன .


இதன் முன்னோடியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இது தொடர்பான விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்குடன்   மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  டெங்கு ஒழிப்பு குழு உறுப்பினர்களுக்கான அறிவூட்டல்  நிகழ்வு  இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராசா  தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  இடம்பெற்றது .  

இன்று இடம்பெற்ற நிகழ்வில்  வளவாளராக கலந்துகொண்ட மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  எம் . அச்சுதன்  தெரிவிக்கையில் டெங்கு என்பது ஒரு நோய் மட்டும் அல்லாது தற்போது ஒரு சமூக பிரச்சினையாக வளர்ந்துகொண்டு வருகின்றது .

இந்த விடயத்தில் டெங்கு நோய் பெருக்கத்தில் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் நான்காவது இடத்திலும் அதேவேளை கடந்த வருடம் டெங்கு பெருக்கத்தில் மட்டக்களப்பில் மண்முனை வடக்கு பகுதி முதல் இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஆகவே இந்த டெங்கு நோயை ஒழிப்பது என்பது மருத்துவத்தில் மட்டும் அல்லாது எமது கிராம மட்டத்திலும் எமது வீட்டு மட்டத்திலும் நடைமுறை படுத்த வேண்டும் .

இந்த விடயம் தனியே சுகாதார திணைக்களத்தில் மட்டும் செய்யமுடியாத காரியமாகும் .

எனவே இதற்கான முழு ஒத்துழைப்பும் சமூக மட்டத்தில் இருந்து பெறவேண்டும் .  இதனை அடிப்படையாக கொண்டு தான் அரசினால் டெங்கு ஒழிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது . 

இந்த குழு ஒவ்வொரு கிராமசேவை பிரிவிகளிலும் இயங்கி வருகின்றது .  இவ்வாறன குழுக்களுக்கு இந்த டெங்கு எவ்வாறு உருவாகிறது ,இதனை எவ்வாறு உருவாவதை தடுக்கலாம் அல்லது பரவுவதை எவ்வாறு குறைக்கலாம் போன்ற பூரணமான அறிவூட்டலை கொடுப்பதற்கான  செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது  .

 அந்த வகையில் இந்த அறிவூட்டல்கள் மூலம் எதிர் கால நடவடிக்கையின் போது டெங்கு ஒழிப்பு குழுவினர்களினால்  டெங்கு பெறுவதனை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  தெரிவித்தார் .


இந்நிகழ்வில்  வளவாளராக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  எம் . அச்சுதன்  மற்றும் மட்டக்களப்பு  பிராந்திய  பொது சுகாதார மேற்பார்வை   பரிசோதகர் .  கே . ஜெயரஞ்சன் ,  பிராந்திய  பொது சுகாதார மேற்பார்வை    பரிசோதகர்  என்.  நந்தகுமார் , புளியந்தீவு பொது சுகாதார  பரிசோதகர்   எஸ் . அரவிந்த் , கோட்டமுனை பொது சுகாதார  பரிசோதகர்   வி. சி .  சகாதேவன் , கொக்குவில்  பொது சுகாதார  பரிசோதகர்   டி . ராஜா ரவி தர்மா , வெட்டுகாடு  பொது சுகாதார  பரிசோதகர்   எஸ் . அமுதமாலன் , கிராம மட்டத்தில் இயங்கும் டெங்கு ஒழிப்பு குழு உறுப்பினர்கள் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிராமசேவை உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர் .