மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு மத்திய மற்றும் மாகாண அரசுகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.இந்த தேசிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் அனைவரையும் அரசாங்க சேவையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையினை மத்திய மற்றும் மாகாண அமைச்சுகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2012 மார்ச் 31 முன்பு பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு பின்னர் பட்டம்பெற்றவர்களுக்கு இதுவரையில் எதுவித நியமனங்களும் வழங்கப்படவில்லை.அவர்களின் நியமனங்கள் தொடர்பில் எதுவித கருத்துகளும் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கின்றனர்.

புதிய ஆட்சி மாற்றத்தின் விளைவு ஆர்ப்பாட்டங்கள் மாத்திரமே,அரசே உடனடியாக வழங்கு வேலைவாய்ப்பினை,தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்ட 10000வேலைவாய்ப்பு எங்கே,பதவி உங்களுக்கு பரிதாபம் எங்களுக்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தாங்கள் தொடர்ந்து அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுவருவதாகவும் தமது நியாயமான கோரிக்கையினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உப தலைவர் ரி.கிஷான் தெரிவித்தார்.

அத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது வயதெல்லையினை அதிகரிக்கவேண்டும் எனவும் கடந்த காலத்தில் 35 வயதினை தாண்டிய 50க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2016 ஜனவரி முதல் வாரத்தில் 2700 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கநடவடிக்கையெடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதிமொழிகளை வழங்கியிருந்தபோதிலும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல் நடாத்தினார்.