“உயர்வாய்” பாடல் இறுவெட்டு வெளியீடு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறைகாயகவுள்ள இளம் கலைஞர்களுக்கு வழியேற்படுத்திக்கொடுப்பதற்கான முயற்சியை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதுடன் அதற்கான ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,கல்லடி,நாவற்குடாவை சேர்ந்த ஹர்சனின் தயாரிப்பில் உருவான “உயர்வாய்” பாடல் இறுவெட்டு வெளியீடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏ.என்.அன்ரூவின் இசையில் லோஜிதனின் பாடல் வரியில் கே.கொன்ஸரனின் இயக்கத்தில் மனதை வருடும் வகையில் இந்த பாடல் ஒளி,ஒலியுடன் ரம்மியமான காட்சி அமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெளியிட்டுவைத்தார்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

இன்றைய நாளை தலைமுறையினருக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தக்கூடியதாக இந்த இறுவெட்டு வெளியிடப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது.

எமக்கு என்று கலைகள்,பாரம்பரியங்கள் இருந்தன.அவை இன்று இல்லாத நிலையே இருந்துவருகின்றது.எமது இளம் கலைஞகள் அடையாளப்படுத்தப்படாத நிலையே இருந்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறைகாயாக பல இளைஞர்கள் உள்ளனர்.அவர்களுக்கு வழியை ஏற்படுத்தி அவர்களின் திறமையினை உலகெங்கும் கொண்டுசெல்லவேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை நான் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளேன்.அதற்காக அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

இந்த இறுவெட்டு வெளியீட்டிற்காக அவரது குடும்பம் பெரிய உதவிகளை வழங்கியுள்ளது.அதற்காக அவர்களை பாராட்டுகின்றேன்.என்றார்.