புத்தாண்டில் நல்லிணக்கம் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் -எஸ்.வியாழேந்திரன் பா.உ.

புதிய ஆண்டில் தமிழ் அரசியல் கைதிகளை நல்லிணக்கம் புரிந்துணர்வு அடிப்படையில் விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில் அவர்களின் நிலைமையினை அறிவதற்காக விஜயம் செய்த அவர் அவர்களின் விடுதலை தொடர்பிலும் கலந்துரையாடினார்.

அத்துடன் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக மூன்று சிறைக்கைதிகளையும் வழியனுப்பிவைத்தார்.
புத்தாண்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.

இன்று நாங்கள் மாவீரர் தினத்தினை அனுஸ்டித்துவரும் நிலையில் அன்றைய தினம் குறுஞ்செய்தி அனுப்பியவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்துவைப்பதன் நியாயத்தன் தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இவர்களின் நிலைமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் சிறைச்சாலைகள்,மறுசீரமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார்.

இதன்போது சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடவந்த உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.