கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீடத்தினை புதிய இடத்தில் அமைப்பதற்கு ஏழு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீடத்தினை புதிய இடத்தில் அமைப்பதற்கு ஏழு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பீடாத்திபதி டாக்டர் கே.ரி.சுந்தரேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீடத்தின் மருத்துவ பகுதிக்கான புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.ரி.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரஹ்மான்,மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.திருக்குமார்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எஸ்.பகிரதன்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் உட்பட விரிவுரையாளர்கள்,பெற்றோர்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது புதிய மாணவர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் மருத்துவ பீடத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

எதிர்வரும் கல்வி ஆண்டுக்காக 59 மருத்துவபீட மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டனர்.இவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பீடாதிபதி டாக்டர் கே.ரி.சுந்தரேசன்,
2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டகிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீடம் பலவித இன்னல்களுக்கு மத்தியில் இன்று வளர்ச்சியை எட்டியுள்ளது.

இங்கு உருவாகும் வைத்தியர்கள் தரம் குறைந்தவர்கள் அல்ல.இங்கிருந்து செல்லும் மாணவர்கள் பலர் தமது திறமைகளை பல இடங்களில் நிரூபித்துள்ளனர்.கொழும்பு போன்ற வைத்தியசாலையில் கடமையாற்றும் விரிவுரையாளர்கள் இங்கிருந்து செல்லும் வைத்தியர்கள் சிறந்த சேவையினை வழங்குவதாக கூறியிருக்கின்றார்கள்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வருடாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறுகின்றனர்.அதில் எமது மாணவர்களும் ஐந்தாம் பத்தாம் இடங்களை பெற்றுள்ளனர்.பொதுவான பரீட்சித்தல் மூலம்பெற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் வெற்றிபெறவேண்டுமானால் விரிவுரையாளர்களும் மாணவர்களும் பொறுப்புகளை எடுக்கவேண்டும்.அவரவர் பொறுப்பினை உணர்ந்துசெயற்படவேண்டும்.அப்போதுதான் நாங்கள் அடுத்த படியை எட்டமுடியும்.

தற்போது இங்குள்ள கட்டிடங்கள் தற்காலிக கட்டிடங்களாகும்.பிள்ளையாரடியில் ஐம்பது ஏக்கரில் ஏழு பில்லியன் ரூபா செலவில் மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.ஏற்கனவே அங்கு இரண்டு மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.மருத்துபீடத்தினை அமைப்பதற்கு குவைத் அரசாங்கம் நான்கு பில்லியன்களை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.

நாங்கள் பகிடிவதை இல்லாத ஒரு பீடத்தினை உருவாக்குவதையே விரும்புகின்றோம்.அதற்கு எந்தவித சகிப்புத்தன்மையும் காட்டப்படமாட்டாது.பகிடிவதையில் ஈடுபடுவோர் தெளிவான ஆதரங்கள் கிடைக்குமிடத்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.எமது மாணவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் நல்ல நிலையில் உள்ளது.