பொதுமக்களுக்கு உதவி செய்பவர்களாக பொலிஸார் இருக்கவேண்டும் -மட்டு.,அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர்

பொலிஸார் பொதுமக்களின் தேவையினை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்பவர்களாக திகழவேண்டும் என மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.ஜே.யாக்கொட ஆராய்ச்சி தெரிவித்தார்.

புத்தாண்டினை முன்னிட்டு இன்று அரச திணைக்களங்களில் புத்தாண்டில் கடமையேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

பொலிஸ் திணைக்களமும் இன்றைய புத்தாண்டில் அரச ஊழியர்களின் உறுதிமொழியை ஏற்று இன்று தமது கடமையினை ஆரம்பித்தது.

கிழக்கு மாகாண பொலிஸ் திணைக்களத்தின் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் டபிள்யு.ஜே.யாக்கொட ஆராய்ச்சியின் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் ஜயசிங்க,உதவி பொலிஸ் அத்தியட்சர் ரத்நாயக்க உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு உயிரிழந்த பொலிஸாரினை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அரச உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் பிரதிப்பொலிஸ்மா சிறப்பு உரையும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.