மட்டக்களப்பில் லொறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் - அரச அதிபரிற்கு மகஜர் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களின் நடவடிக்கையினை கட்டுப்படுத்துமாறு கோரியும் லொறி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லொறி உரிமையாளர்கள் மட்டக்களப்பு அரசடியில் தமது லொறிகளை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல காலமாக மண் ஏற்றுவதற்கான லொறிகளை தாங்கள் வைத்திருந்து மண் ஏற்றும் தொழிலைசெய்துவந்ததாகவும் ஆனால் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் செல்வாக்கினை சிலர் பயன்படுத்தி பல அனுமதிகளைப்பெற்று தாங்கள் மட்டும் மண்ணைப்பெற்றுவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
லொறியை வைத்துள்ள தாங்கள் மண்ணை அகழ்வதற்கு அனுமதி கோரினால் கனியவள திணைக்களத்தினால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் ஆனால் சிலர் பல அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த ஆட்சியின் போது இங்கிருந்த சில அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக செயற்பட்டவர்கள் பல அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்த மண் அகழ்வினை செய்வதாகவும் அதன் காரணமாக தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பழக்கடை காரர்கள்,ஜிம்சென்டர் நடத்துபவர்கள்,டீக்கடை வைத்துள்ளவர்களுக்கு மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் லீசிங் முறையில் லொறிகளைப்பெற்று அதன் மூலம் மண் அகழும் தொழிலைசெய்துவரும் தமக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மணல் கொள்ளையர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதன் காரணமாக தாம் மட்டுமன்ற தாம் சார்ந்துள்ள தொழிலாளர்களும் தொழிலை இழக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது லொறிகளின்மேல் ஏறி நின்றும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதுடன் கனியவள திணைக்களத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜர் ஒன்றை கையளித்தனர்.