ஆரையம்பதி உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்க விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை கல்வியை நிறைவுசெய்த மாணவர்கள் உயர் கல்வியை பெற்று அதன் மூலம் சிறந்த தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் மூலம் பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில் பொதுமக்களை அறிவுறுத்தும் நிகழ்வு இன்று காலை நிறுவகத்தில் நடைபெற்றது.

இதன்போது உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் மாணவர்களினால் நிறுவகத்திற்கு முன்பாக விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.

அத்துடன் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில் பாடநெறிகள் மற்றும் அனுமதி விண்ணப்பங்களும் மாணவர்களினால் விநியோகம் செய்யப்பட்டன.

2014ஆம் ஆண்டுக்கு முன்னர் உயர்தரப்பரீட்சை எழுத்திய மாணவர்களுக்கான கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா,தகவல் தொழில்நுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா,ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா போன்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பகுதிநேரம் மற்றும் முழு நேரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பாடநெறியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

கடந்த நான்காம் திகதி முதல் ஒன்பதாம் திகதிவரையில் நிறுவகத்தின் திறந்த கல்லூரி தினம் அனுஸ்டிக்கப்பட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின்போது ஜனாதிபதியின் பதவியேற்பு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

பாடநெறி தொடர்பான விபரங்களையும் விண்ணப்பங்களையும் பெறவிரும்புவோர் மட்டக்களப்பு,ஆரையம்பதி,கோவில்குளத்தில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் கல்விசார் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலனை நேரடியாக தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது 0652247519 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டுபெற்றுக்கொள்ளலாம்.