குப்பைகொட்டுவதை நிறுத்துமாறு கோரி பிரதேசசபையினை முற்றுகையிட்டு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் கடல் மற்றும் குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் பிரதேசசபையினால் நீண்டகாலமாக குப்பை கொட்டப்பட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் பிரதேச மக்களினால் பிரதேச சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00மணியளவில் பிரதேசசபையினை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் போராட்டம் நடாத்தியதன் காரணமாக சபையில் பதற்ற நிலையேற்பட்டது.

களுதாவளை நான்காம் வட்டாரப்பகுதியில் உள்ள கடல் பகுதிக்கு 50 மீற்றர் தூரப்பகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டுவந்துள்ளன.

இதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் விசித்துவந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன் இயற்கை வனப்புமிக்க கடற்பகுதியும் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் களுதாவளை பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய கிராமம் என்ற பெயருடன் காணப்படும் நிலையில் குறித்த பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளினால் விவசாய செய்கையாளர்களும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் ஆகியோர் ஸ்தலத்துக்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர்.

இதன்போது களுதாவளை பகுதியில் குப்பை கொட்டுவதை நாளை புதன்கிழமை முதல் நடைநிறுத்துவதுடன் அப்பகுதியை பதினைந்து நாட்டுகளுக்குள் சுத்தம் செய்துதருவதாகவும் அத்துடன் குப்பை கொட்டுவதற்கு இடம் ஒன்றை தெரிவுசெய்யும் வரையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதை இடைநிறுத்துவதாகவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி யா.வசந்தகுமார் தெரிவித்தார்.

பிரதேசசபையின் செயலாளர்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட எழுத்துமூலமான உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், களுதாவளை பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற எஸ்.வியாளேந்திரன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையினால் குப்பைகள் கொட்டப்படும் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.