மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் -மட்டு.சிவில் பிரஜைகள் சபை தலைவர்

கடந்த காலத்தில் தமிழர்களின் வளங்களை சுருட்டிக்கொண்டு தமது பகுதிகளை மட்டும் அபிவிருத்திசெய்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களுக்கு செய்த பாரிய அநீதியென மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வி.அமலதாஸ் தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

நல்லாட்சியில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று தமிழ் மக்கள் கருதியிருந்தபோதிலும் பல இழப்புகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால யுத்ததின்போது தமிழ் மக்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்ட மக்கள்.அவர்களை மீளகட்டியெழுப்பவேண்டிய அவசியமும் அவசரமும் உள்ளது.காலம்காலமாக அரசாங்கத்துடன் இணைந்திருந்து தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்துவந்தவர்கள் இன்று மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களாக இந்த அரசாங்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்கின்றனர்.அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்து அனுப்பியுள்ளனர்.அவ்வாறானவர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு பதவி வழங்கப்படவேண்டும்.

அதனைவிடுத்து தமிழ் மக்கள் வளங்களை சுருட்டிக்கொண்டு தங்களது பகுதியை மட்டும் அபிவிருத்தி செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை வழங்கியுள்ளனர்.

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு உதவிகளை நேரடியாக வழங்கியுள்ளனர்.அவ்வாறானவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமற்ற செயலாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகைதருகின்றனர்.அவர்கள் முஸ்லிம் தலைவர்களை சந்திக்கின்றார்கள்.முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருகின்றனர்.சவூதி அரேபியா,ஈரான் உட்பட பல நாடுகளில் இருந்து உதவிகள் வருகின்றன.அவர்கள் தமிழர்களின் பகுதிகளுக்கு செல்வதும் இல்லை,எந்த நிதியையும் ஒதுக்குவதும் இல்லை.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு அதிகளவான சலுகைகளும் உதவிகளும் வழங்கப்படுகின்றன.நாங்கள் வழங்கவேண்டாம் என்று கூறவில்லை.பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் கருத்தில்கொள்ளப்படவேண்டும் என்றே கூறுகின்றோம்.

இதுவே அரசியல் நயவஞ்சக செயற்பாடாகும்.ஜனநாயக நடைமுறையில் பங்குகொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு பின்னடிப்பதான காரணங்களை வெளிப்படுத்தவேண்டும்.