கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளரை பதவி நீக்குமாறு விளையாட்டு உத்தியோகத்தர்கள் சங்கம் கோரிக்கை

கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளரை 17ஆம் திகதிக்கு முன்னர் பதவியிலிருந்து நீக்காதுவிட்டால் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான அணிநடையினைப் பகிஸ்கரிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டு உத்தியோகத்தர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர்கள் கையொப்பமிட்டு ஆளுனருக்கு தொலை நகல் மூலமாக சனிக்கிழமை (12) பகல் அனுப்பி வைத்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண கல்வி விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளருடன் கடந்த 2015.11.11.ம் திகதி கிழக்கு மாகாண விளையாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் கலந்துரையாடி மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளருக்கு எதிராக குற்றச்சாட்டுக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போது சம்மாந்துறையில் 2015.11.15ம் திகதி விளையாட்டு அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு இடம்பெற்றபோது நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய போது ஒரு வார காலத்தினுள் பணிப்பாளரினால் வழங்கப்படும் என செயலாளரினால் உறுதியளிக்கப்பட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தேசிய விளையாட்டு விழாவில் கபடி போட்டியில் பங்கு பற்றும் வீரர்களுக்கு தரம் குறைந்த பாதணிகளும் சீருடைகளும் வழங்கப்பட அவற்றை வீரர்கள் ஏற்றுக் கொள்ளாததால் மாற்று பாதணிகளும் சீருடைகளும் வழங்கப்படும் என பணிப்பாளர் உறுதியளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இவ் வீரர்கள் தேசிய விழாவில் தங்கப்பதக்கம் மாகாணத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில், திணைக்களப் பணிப்பாளரின் திறமையற்ற முகாமைத்துவத்தினால் கிழக்கு மாகாணம் இதுவரை 14 பதக்கங்களையே பெற்றுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற விளையாட்டுப் பொருள்கள் கொள்வனவின் போது நடைபெற்ற ஊழல் தொடர்பாக விளையாட்டுப் பணிப்பாளருக்கு எதிராக விளையாட்டுக் கழகங்களினால் முறைப்பாடு செய்யப்பட்டு பணிப்பாளருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வீரர்களின் சாட்சியங்களுடன் அறிக்கை தங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டும் இதுவரை பணிப்பாளருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததையிட்டு மனவருத்தம் அடைகிறோம்.

விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளரை 17.12.2015ம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திலிருந்து அகற்றாவிட்டால் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய வியைளாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் அணிநடையில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைசார் உத்தியோகத்தர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொள்ளாது புறக்கணிப்பு செய்வதென சங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை திணைக்களத்திலிருந்து அகற்றவிடாமல் அரசியல்வாதிகள் பக்கபலமாக இருப்பதையும் நாங்கள் அறிவாம்.

எனவே அளுனர் அவர்களே இதற்கான தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தயவாகவும் கீழ்ப்படிவாகவும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் விளையாட்டுத்துறை அமைச்சர், கிழக்கு மாகாண விளையாட்டத்துறை அமைச்சர், கிழக்கு மாகாண பிரதம செயலளர் , மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.