வடகிழக்கில் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ள உதவி –ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

வடக்கு கிழக்கில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என இலங்கை மற்றும் மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் மத்திய நிலையம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான தூதுவர் டேவிட் டலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக சர்வதேச தொழில் தாபனத்தின் (ஐடுழு) இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான பணிப்பாளர் திரு.டொங்லின் லீ,தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகளுக்கான அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரத்தன,மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தர்மசேன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான நிதி உதவியின் கீழ் இந் நிலையம் அரசடி நூலக கட்டிடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையத்தின் ஊடாக மாவட்டத்தில் தொழிலை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும், மாவட்ட செயலகத்திற்கும் வேலை வாய்ப்புக்கள் தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள இயலும். இந்நிலையத்திற்கான கட்டடப் புனருத்தாபனத்துடன், கணிணி மற்றும் தேவையான அலுவலக உபகரணங்களும் தளபாடங்களும்,

காட்சிப்பதாதைகளும் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் உதவியின் கீழ் வழங்;கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரனையுடன் ஏற்கனவே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவது நிலையமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்திற்கான நிலையம் அடுத்த கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.