கடத்தல் தொடர்பில் ரி.எம்.வி.பி.முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி கிராத்தைச் சேர்ந்த ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி என்பவர் தனது வீட்டில் இருந்த வேளையில் 17.07.2007 அன்று கடத்திச் செல்லப்பட்டு காணமல் போனது பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் ரீ.எம்.வி.பி. கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் ஞாயிறன்று தெரிவித்தனர்.


தங்களுக்கு தொடர்ந்தும் உயிரச்சுறுத்தல் இருந்தபடியால் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதைத் தாங்கள் தவிர்த்து வந்ததாக முறைப்பாட்டாளர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

அதனால் கடந்த 07.11.2015 அன்றே இந்த விடயம் தொடர்பாக முறைப்பாட்டாளர்கள் நேரடியாக பொலிஸ் நிலையம் வந்து முறையிட்டதன் பிரகாரம்  விசாரணை மேற்கொண்ட ஏறாவூர்ப் பொலிஸார் புலிபாய்ந்தகல்லைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம் மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த பிள்ளையான் நித்தியானந்தம் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் ஐந்து பேர் தொடர்புபட்டிருப்பதாக உறவினர்கள் காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட்சியமளிக்கையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த வெள்ளியன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.