கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்துக்கு மூவரின் பெயர் முன்மொழிவு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வெற்றிடத்திற்கு கிழக்குப் பல்கலைக் கழக பேரவை உறுப்பினர்களால் மூவரின் பெயர்கள் முன்மொழிவு செய்யப்பட்டுள்ள.


சனிக்கிழமையன்று இடம்பெற்ற கிழக்குப் பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் இந்த மூவரின் பெயர்களும் முன்மொழியப்பட்டு சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

பேரவை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் தாவரவியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் முதலாவதாகவும். தாவரவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரா மகேந்திரநாதன் இரண்டாவது இடத்திலும், விவசாய பீட பீடாதிபதி கலாநிதி பி. சிவராஜா மூன்றாவது இடத்திலும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பு முடிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் உபவேந்தர் இறுதி நியமனம் ஜனாதிபதியினால் வழங்கப்படும். புதிய உபவேந்தர் நியமனம் மூன்றாண்டுகளைக் கொண்டதாக இருக்கும்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய முன்னாள் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் பதவிக் காலம் வறிதானதையடுத்து கிழக்குப் பல்கலைக் கழக தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.