தூசு படிந்த நீரை அடைத்துள்ள பெருமளவான குடிநீர் போதல்கள் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டது

மட்டக்களப்பு நகரில் தூசுகள் படிந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்த பெருந்தொனையான குடிநீர் போத்தல்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு திருமலை வீதியில் குடிநீர் போத்தல் விற்பனை நிலையத்தில் இருந்தே இந்த போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்றை பொதுமகன் ஒருவர் வாங்கிச்சென்று அருந்தியபோதே இது கண்டுபிடிக்கப்பட்டு வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினை தொடர்ந்து பெருமளவான அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது ஒரு லீற்றர் கொள்ளளவைக்கொண்ட சுமார் 1600க்கும் அதிகமான குடிநீர் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த குடிநீர் விநியோகஸ்தர் மற்றும் குடிநீரை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் சுத்தமான நீரை அருந்தவேண்டும் என்பதற்காக இவ்வாறான குடிநீரை வாங்கிப்பருகும்போது இவ்வாறான நிலைமைகளினால் பொதுமக்கள் பெரும் சுகாதார சிக்கல்களுக்கு உட்படுவது கவலைக்குரிய விடயமாகும்.