மணல் அகழ்வினை தடுக்ககோரி பிரதேச மக்கள் மண்டூரில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டூர் கம்பியாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று திங்கட்கிழமை முற்பகல் பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பியாறு பகுதியில் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக அதனை சூழவுள்ள பகுதிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பகுதிகளில் இருந்து வருவோர் இப்பகுதியில் இந்த மண் அகழ்வு பணியை மேற்கொள்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் தமது வீட்டுத்தேவைக்காக சிறியளவு மண்ணை எடுக்கும்போது தமது கடமையினை செய்யும் பொலிஸார் பாரியளவில் மேற்கொள்ளும் மண் அகழ்வு தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனியொரு நபர் இவ்வாறான பாரிய மண் அகழ்வினை மேற்கொண்டுவருவதாகவும் இவற்றினை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டும் தமது தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் மண்ணை அகழ்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டூர் கணேசபுரம்,14ஆம் கொலணி மற்றும் கம்பியாறு பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு வந்த போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டபிள்யு.பி.சம்பத் ஆகியோர் ஸ்தலத்துக்கு வருகைதந்து பொதுமக்களிடம் கலந்துரையாடினர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம்,

பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் வகையில் நாளை புவிச்சரிதவியல் சுரங்கம் அகழ்வு பணியகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பிரதேச மக்களின் தேவையினை கருத்தில்கொண்டு அவர்களின் வீட்டுத்தேவைக்கான மண்ணை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

அதேபோன்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மண் அகழ்வினை நிறுத்துவதற்கான உறுதிமொழியை பொலிஸாரும் வழங்கியுள்ளனர்.என்றார்.