மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பில் இருந்து தமிழர் பேரவையுடன் இணைந்தவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை முறையான வகையில் இணைக்காதது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பில் இருந்து நிர்வாக சபையின் அனுமதியின் சென்றவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா மற்றும் அமைப்பின் ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாமாங்கராஜா,

நாங்கள் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவர்கள் அல்ல.ஆனால் எந்த விடயத்திலும் வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.எமக்கு ஆலோசகராக உள்ள ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினையோ,அல்லது நிர்வாக சபையினையோ தொடர்புகொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் உட்பட மூவர் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளனர்.அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு என்று தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.இது தொடர்பில் ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினை விமர்சித்துவருவோர் எங்களிடம் தொடுக்கும் வினாக்களுக்கு விடையளிக்கவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக ஆராய்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பில் இருந்து சென்றவர்களிடம் விளக்கம் கோரவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து அவர்கள் தொடர்பான நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.