முச்சக்கர வண்டி சாரதி மீள்பதிவு முறையை கண்டித்து மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம்

(லியோன்)


மட்டக்களப்பு  முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று மட்டக்களப்பு நகரில்  மாபெரும் கவனஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர் .


இலங்கையில் எப்பாகத்திலும் இல்லாத ஒன்றான மாகாண போக்குவரத்து அதிகார சபையில்  முச்சக்கர வண்டி  சாரதிகளை    மீள்பதிவு என்ற முறையை  கிழக்கு மாகாணத்தில் மட்டும் கொண்டு வரப்பட்டதை கண்டித்து இன்று மட்டக்களப்பு  முச்சக்கர வண்டி சாரதிகள் கவனஈர்ப்பு போராட்டத்தினை  மட்டக்களப்பு காந்தி பூங்கா  அருகில்  மேற்கொண்டனர்.

முச்சக்கர வண்டி சாரதிகள்  மேற்கொண்ட  கவனஈர்ப்பு போராட்ட  இடத்திற்கு வருகை தந்த  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் . வியாலேந்திரன்  , ஸ்ரீ நேசன் ஆகியோர்  சாரதிகளோடு கலந்துரையாடியதோடு   முச்சக்கர வண்டி சாரதிகள்  முன் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் பெற்று தருவதா வாக்குறுதி அளித்தனர்

இந்நிலையில்  ஆர்பாட்டம் நடைபெற்ற  இடத்திற்கு  வருகை தந்த  கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை முகாமையாளர்  எஸ் . யுவனாதன்  முச்சக்கர வண்டி சாரதிகள்  முன் வைத்த கோரிக்கைகளுக்கு  தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தற்காலிகமாக மாகாண போக்குவரத்து அதிகார சபையில்  மேற்கொள்ளப் படும்  முச்சக்கர வண்டி  சாரதிகளை    மீள்பதிவு நடவடிக்கைகளை  இடைநிறுத்துவதாகவும்  , இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என தெரிவித்துக்கொண்டார் .

இதற்கிணங்க  முச்சக்கர வண்டி சாரதிகள்   மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று  மாவட்ட அரசாங்க அதிபர்  பிஎஸ் .எம் .சாள்ஸிடம்   அவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை  கையளிக்கப்பட்டதுடன்  . தொடர்ந்து   தபால் அலுவலகத்திற்கு சென்று  தமது கோரிக்கைகள் அடங்கிய  ஜரினை  தபால் மூலம்  மாகாண முதலமைச்சருக்கு  அனுப்பிவைத்தனர்  . 


 இடம்பெற்ற பேரணியில்  பெருமளவான முச்சக்கர வண்டி சாரதிகளும் , மட்டக்களப்பு  மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரனும் கலந்துகொண்டார் .