தேசிய உற்பத்தி திறன் மேம்பாடு தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முதலாம் இடம்

(ஜே.எச்.இரத்தினராஜா)

தேசிய உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சானது நாட்டின் உற்பத்தி திறன் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கினை இலக்காகக்கொண்டு நிறுவனத்துறைகளை நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தி போட்டிகளை நடாத்தி வருகின்றது.
 இதனடிப்படையில் திணைக்களங்களுக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையானது மதிப்பீட்டின்; அடிப்படையில் 2014ஃ2015 காலப்பகுதிக்கு நடாத்தப்பட்ட தெரிவில், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதலாவது இடத்தினைப்பெற்ற திணைக்களங்களில் இரண்டாவது இடத்தினைப் பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும்.

கடந்த வருடங்களில் 2011 ஃ2012 காலப்பகுதிக்காக நடத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் தெரிவில் முதன்முதலாகக் கலந்துகொண்டு திணைக்களங்களுக்கிடையே 3வது இடத்தினையும், 2013 ஃ 2014 காலப்பகுதியில் 2வது இடத்தினையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையானது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தொடர்ச்சியான முன்னேற்றத்துடன் வெற்றியினைப்பெற முன்னுதாரணத்துடன் செயற்பட்ட முன்னாள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.சதுர்முகம் அவர்களது சிறந்த தலைமைத்துவமும், பணிமனையின் சகலதரப்பு  உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஒன்றிணைந்த அர்ப்பணிப்புள்ள சேவையுமே காரணமாகும்.

அதேவேளை இப்பணிமனையின்கீழ் செயற்படும் களுவாஞ்சிக்குடி, ஆதார வைத்தியசாலையும் தேசிய ரீதியில் 3வது இடத்தினைப்பெற்றுள்ளது. இதற்கு களுவாஞ்சிக்குடி, ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எஸ்.சுகுணன் அவர்களது தொடர்முயற்சியே காரணமாகும்.