பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் எட்டாவது ஆண்டு கழக தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

பெரியகல்லாறு மட்டுமன்றி அதனை அண்டிய பகுதிகளிலும் சமூக மற்றும் கல்வி,விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.

பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் எம்.குகராசா,பட்டிருப்பு வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் ஏ.நாகராஜா,பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் கே.நல்லதம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை,சாதாரண தர பரீட்சை,உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த,பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் உட்பட கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் விளையாட்டுத்துறையில் மாவட்ட,மாகாண தேசிய ரீதியில் சாதனை படைத்தவர்களும் விளையாட்டுத்துறையில் பெருமைசேர்த்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.