பிரதேச அபிவிருத்துக்குழுவின் தலைவர்களாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை கவலைக்குரியது –பிரசன்ன இந்திரகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின்  தலைமைப் பதவிக்கு தமிழர்கள்  எவரும் நியமிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக ஜனாதிபதியடனும் பிரதமருடனும் பேசி இம் மாவட்டத்தில்  தமிழர்களை  பெருன்பான்மையாக கொண்ட  பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்புக் குழுக்களின் தலைவர்களாக   மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் நியமிப்பது தொடர்பாக அவர்களின் கவனதிற்கு கொண்டு வருமாறு  என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருக்கு  கடிதமொன்றையும்  அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
.
இது தொடர்பாக  கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்   மேலும் தெரிவிக்கையில்,

"மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14  பிரதேச செயலக பிரிவுகளில் 10 பிரதேச செயலக பிரிவுகள் தமிழர்களை பெருன்பான்மையாக கொண்டுள்ள போதிலும் அந்த பிரதேச அபிவிருத்திக்குழுக்களின் தலைவைராக  மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களில் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மட்டுமே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்தாக அறியமுடிகின்றது.

இம் மாவட்டம்  72 சத வீதத்திற்கும் மேல் தமிழர்களைக் கொண்டது.  ஐந்து மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 3 பேர் தமிழர்கள். 11 மாகாண சபை உறுப்பினர்களில் 8 பேர் தமிழர்களாக இருக்கின்ற போதிலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி என்று கூறினாலும்  இந்த ஆட்சியிலும் தாங்கள்  தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் மக்கள் கருதுவது சரியாகவே தென்படுகின்றது.

ஏற்கனவே அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை நடத்திய சந்திப்புக்களில்  வடக்கு - கிழக்கில்  தமிழர்களை பெருன்பான்மையாக கொண்ட மாவட்டங்களின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணப்புக் குழு தலைமை பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு  கொள்கை ரீதியாக இணக்கம் காணப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு தலைமை பதவி வழங்கப்படவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட இணைத் தலைவர்களில் ஒருவராகவே அதுவும் இறுதியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அந்த பதவி கூட வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்'தலைவர்களாக தேசிய பட்டியல் வழியாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட இரு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் இதனை விட  முதலமைச்சர் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பதவி வழியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்திலுள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைமை பதவிக்கு வழமைக்கு மாறாக  நல்லாட்சி என கூறும் தற்போதைய ஆட்சியில் கூட இம் மாவட்டத'திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாகாண சபை உறுப்பினர்கள்  எவரும்  நியமிக்கப்படாமை  வழமைக்கு மாறான ஒரு செயல்பாடாகவே அமைகின்றது. அது மட்டுமல்லை சில தமிழ் பிரதேசங்களில் இன ரீதியான முரண்பாடுகளுக்குக் கூட இது வழி வகுப்பதாக கூட அமையும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களான  தமிழர்களான முன்னாள் பிரதி அமைச்சரொருவரும் தற்போதைய  மாகாகாண சபை உறுப்பினரொருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும்  தற்போது நல்லாட்சி என கூறப்படும் ஆட்சி மாற்றத்திற்கு  முக்கிய பங்காளிக் கட்சியாக இருந்துள்ளது.

எமது இந்த கோரிக்கையானது எந்தவொரு இனத்திற்கும் எதிரானது அல்ல. தமிழ் மக்களின்  உரிமையைத் தான் வலியுறுத்துகின்றது "  என்றார்..