மட்டக்களப்பில் சமூகங்களின் தனித்துவம் வெளிப்படுத்தப்படவில்லை –மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமூகங்கள் பிரதேச ரீதியாக சமூக குழுக்களாக வாழ்ந்துவரும்போது அவர்களின் தனித்துவம் வெளிப்படுத்தப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

மத்திய கலாசார திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கிய விழா நாவற்குடா இந்துக்கலாசார திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன்,வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி டினேஸ்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.வாசுதேவன்,பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இலக்கியவாதிகள் பரிசு வழங்கி கௌரவிக்க்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மேலதி அரசாங்க அதிபர்,
அந்ததந்த காலத்தில் வாழும் சமூகம் எதனைப்பார்க்கின்றதோ, எதனைச்சிந்திக்கின்றதோ எதனைச்செய்கின்றதோ அவை அனைத்தையும் ஏதொ உருவடிவத்தில் வெளிக்கொணரப்படும்.

எங்களது இலக்கியங்கள் மிகமிக தொன்மையானது.இந்தியாவில் மிக தொன்மையான இலக்கியங்களுல ஒன்றாக தொல்காப்பியம் விளங்குகின்றது.பல ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் தமிழ் இலக்கியத்தினை வளர்த்துவருகின்றது.

இவ்வாறு அந்த காலப்பகுதியில் வாழ்ந்துவந்த வாழ்க்கை முறை அவர்களின் பண்பாடுகள் அவர்களின் தொழில் நிலைகள் கலாசாரம் ஆகியவையினை நாங்கள் இலக்கியம் ஊடாகவே அறிந்துள்ளோம்.

கண்ணகியின் சிலப்பதிகாரம் ஊடாக நாங்கள் பல விடயங்களை அறியமுடியும்.இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் ,காலத்தின் கண்ணாடியாகவே இருக்கின்றது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்கும்போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்துவந்ததுடன் அதனுடன் இணைந்து இஸ்லாமிய மக்களும் வாழ்ந்துவருகின்றனர்.

ஒவ்வொரு சமூகமும் பிரதேச ரீதியாக சமூக குழுக்களாக வாழ்ந்துவரும்போது அவர்களின் தனித்துவம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படவில்லை.

மொழி ரீதியாக பார்த்தால் மட்டக்களப்பில் எழுவான் கரையில் பேசும் தமிழுக்கும் படுவான்கரையில் பேசும் தமிழுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.வாழைச்சேனையில் பேசும் தமிழுக்கு வேறுபாடு உள்ளது.

இதனைப்போன்று சமூக குழுக்களில் கலை வடிவங்களுக்கு சமூக சாயல் இருக்கும். அத்துடன் இலக்கிய விடயங்களையும் அதன் ஊடாகவே வெளிப்படுத்தினர்.

எமது மொழியின் பேச்சுவடிவங்கள் வேறுபட்டிருந்தாலும் இந்த பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்கின்றோம் என்பதை அடையாளப்படுத்தக்கூடியதாக இந்த கலை இலக்கியங்கள் காணப்படுகின்றன.

தற்போது நாங்கள் அனுபவிப்பதை எதிர்கால சந்ததிக்கு  பாதுகாத்துவழங்கவேண்டிய நிலையில் உள்ளோம்.அதனை செழுமைப்படுத்தி எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்வதற்கு இவ்வாறான நிகழ்வுகள் வழியை ஏற்படுத்தும்.