கிழக்கு மாகாணசபையின் வரவுசெலவுத்திட்டம் சமர்பிப்பு -355பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு

கிழக்கு மாகாண சபையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு புதனன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2015 இன் வரவுசெலவு திட்ட தொகையுடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமானது என்று முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

2016 வரவு செலவு திட்டத்தில் 969 மில்லியன் ரூபாய் விசேட திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 2016 க்கான கிழக்கு மாகாண ஒட்டு மொத்த நிதி 4732 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் 2016 ஜனவரி மாதத்தில் 355 பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணிகளுக்கு அமர்த்துவதற்கு ஏற்பாடுகளும்,

ஜனவரி மாதத்திலிருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள 3537 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகக் குறைந்தது ரூபாய் 3000 மாதாந்தம் கொடுப்பனவாக வழங்கும்; ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் ஒட்டுமொத்தமாக 1190 மில்லியன் ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திக்கு உதவும் முகமாக 2016 ஆம் ஆண்டின் மாகாண சபை வரவு செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்கு உதவியுள்ள ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.