பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் பொலிஸாருக்கு மட்டக்களப்பில் அறிவுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் பால்நிலை சமுத்துவம் தொடர்பிலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அறிவுறுத்தும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு லங்கா ரெஸ்ட் விடுதியில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது.

தேவைநாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைப்பின் சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன்,அமைப்பின் உளவள துணையாளர் திருமதி புண்ணிமூர்த்தி ஜெயதீபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகளின்போது பெண்கள் தொடர்பில் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் இங்கு கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கான நிதியுதவியினை பிரித்தானிய தூதரகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தேவைநாடும் மகளிர் அமைப்பின் பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் உளவளதுணையின் அவசியம் தொடர்பிலும் இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சனால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

பால் மற்றும் பால் நிலைக்கிடையிலான வேறுபாடு,சமூகத்தின் மாறாகொள்கை,நிலைப்பாடு தொடர்பில் அமைப்பின் உளவளத்துணையாளர் திருமதி பி.ஜெயதீபாவினாலும் பொலிஸாருக்கு பால்நிலை பயிற்சியின் அவசியம்,பொலிஸாரின் பதிற்செயற்பாடுகள்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதில் பொலிஸாரின் பங்கு,சுற்றுலா சார்ந்த இடங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் திணைக்களத்தின் இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் கருத்துரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகளும் தொடர்பில் சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சனால் விளக்கமளிக்கப்பட்டது.