மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கட் மைதானம் அமைக்கப்படும் -பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர்

மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் அழைப்பினை ஏற்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டு முதல் விஜயமாக மட்டக்களப்புக்கு பிரதியமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை நிலைமை தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட உயர் மட்டக்கூட்டதில் அமைச்சர் பங்குகொண்டார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவான் சந்திர,பிரதிப்பணிப்பாளர் ஜே.எம்.ஹொடகே,பிரதம பொறியியலாளர் கே.ரணசிங்க,மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன்,பொறியியலாளர்கள்,விளையாட்டுத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக விளையாட்டுத்துறையில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.குறிப்பாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தினை சகல வசதிகளும் கொண்ட மைதானமாக அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதியமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கோரிக்கை விடுத்தார்.

இதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை பொதுவிளையாட்டு மைதானத்தினையும் சீர்செய்து அங்கு கடினபந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அபிவிருத்திசெய்யப்படவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்;டுத்துறையினை அபிவிருத்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் திராய்மடு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் கோரிக்கைக்கு அமைவாக சர்வதேச தரத்திலான கிரிக்கட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.