இளைஞர் தேர்தலை பயன்படுத்தி இளைஞர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சி -இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பயஸ்

இளைஞர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியதன் மூலம் மட்டக்களப்பு தொகுதியில் இளைஞர்கள் மத்தியில் இனவாதம் தூண்டப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும் எனமட்டக்களப்பு தொகுதியில் வெற்றியடைந்த கோட்டைமுனையைச் சேர்ந்த   எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் தெரிவித்தார்.


இந்த விடயங்கள் குறித்து புதன்கிழமை மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பயஸ்ராஜ் மேலும் கூறியதாவது,

நடைபெற்று முடிந்த இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மூன்று தமிழ் சமூக இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது வருந்தத் தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைரூஸ் ஒரு முஸ்லிம் அதிகாரியாக இருந்தபோதிலும் அவர் ஒரு போதும் இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்படவில்லை என்பதற்கு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சான்றாக இருக்கின்றன.

அதேபோல நான் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு அதிகமான முஸ்லிம் சகோதரர்கள் வாக்களித்திருக்கின்றார்கள்

மாறிவரும் தற்போதைய நவீன உலகில் இன்னமும் இனவாத சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் விதைக்க நினைப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பது தமிழருக்காகவோ முஸ்லிம்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. அது தேர்தலில் அதிகூடிய மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெறுபவர்களுக்கே உருவாக்கப்பட்டதாகும்.

அந்த செல்வாக்குடைய நபர்களாக தமிழ்களும் முஸ்லிம்களும் ஏன் சிங்களவர்களாயினும் இருப்பதில் தவறேதுமில்லை.

இதை இனவாதத் தெரிவாக பார்ப்பது வருந்தத் தக்கது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக் காலத்தை இந்த மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களின் ஒற்றுமைக்கான அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.